திருவள்ளூர்
மீஞ்சூர் அருகே தொழில்நுட்பக் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது - புறநகர் ரெயில் சேவை பாதிப்பு
|மீஞ்சூர் அருகே தொழில்நுட்பக் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பொன்னேரி வழியாக அனுப்பம்பட்டு ரெயில் நிலையத்தை கடந்தது. அப்போது ரெயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு என்ஜின் பாதிக்கப்பட்ட நிலையில் நடுவழியில் நின்றது.
பின்னர் ரெயிலை இயக்க டிரைவர் பல முறை முயற்சி செய்தும் முடியாததால் பழுது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு ரெயில்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை ஊழியர்கள் ஆய்வு செய்து குறைந்த வேகத்தில் இயக்க வைத்து மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்கத்தில் செல்லும் புறநகர் ரெயிகள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. தொடர்ந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தொழில்நூட்ப கோளாறு ரெயில்வே ஊழியர்களால் சரி செய்யப்பட்டு சுமார் 2 மணி தாமதமாக புறப்பட்டது.
சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4 வழிப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.