சிவகங்கை
வெடிபொருட்கள் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம்-முதியவர் கைது
|சாக்கோட்டையில் வெடிபொருட்கள் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
சாக்கோட்டையில் வெடிபொருட்கள் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.
2 சிறுவர்கள் படுகாயம்
சாக்கோட்டை போலீஸ் சரகம் பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசேகர். இவரது மனைவி சுபா. இவர்களது மகன்கள் லட்சுதன் (வயது 11), ஹர்சன் (9).
இவர்கள் இருவரும் புதுவயலில் உள்ள தனியார் பள்ளியில் 6 மற்றும் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று மாலை இருவரும் குளிக்க சென்றனர். செல்லும் வழியில் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி (73) என்பவருக்கு சொந்தமான ஆள் இல்லாத வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி மருந்து தயாரிப்பதற்கான கருப்பொருளை எடுத்து வந்து அதனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று அதில் தீ வைத்து சிறுவர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் தீ சுவாலை சிறுவர்கள் மீது பட்டது. இதில் 2 பேரும் தீக்காயம் அடைந்தனர். உடனே அவர்கள் அக்கம், பக்கத்தினரால் மீட்கப்பட்டு காரைக்குடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதியவர் கைது
இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சின்னத்தம்பி என்பவரை கைது செய்தனர்.