< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் தினந்தோறும் சோதனை நடத்தும் வெடிகுண்டு நிபுணர்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் தினந்தோறும் சோதனை நடத்தும் வெடிகுண்டு நிபுணர்கள்

தினத்தந்தி
|
4 July 2023 1:37 PM IST

கோவை கார் வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை விசாரித்து வரும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக தினந்தோறும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்துகின்றனர்.

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு மற்றும் தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டு உள்ளது. இதன் வளாகத்திலேயே தனி கிளை சிறையும் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற வெடிகுண்டுகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை இந்த கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து வரப்படுவார்கள்.

கோவை கார் வெடிப்பு வழக்கும் இந்த கோர்ட்டில்தான் விசாரணை நடந்து வருகிறது. முக்கிய வழக்கு விசாரணை மற்றும் முக்கிய குற்றவாளிகள் அழைத்து வரப்படும்போது மட்டும் சிறப்பு கோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்வது வழக்கம். ஆனால் தற்போது தினமும் அதிக அளவில் வழக்குகள் விசாரணைக்கு வருவதாலும், முக்கிய குற்றவாளிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவதாலும் பாதுகாப்பு கருதி தினமும் காலையில் கோர்ட்டு தொடங்கும் நேரத்துக்கு முன்பாக தொடங்கி 3 மணி நேரம் கோர்ட்டு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஆவடி போலீஸ் கமிஷனரக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்