< Back
மாநில செய்திகள்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உரிமையாளரின் தந்தை தலை சிதறி பலி
மாநில செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உரிமையாளரின் தந்தை தலை சிதறி பலி

தினத்தந்தி
|
13 Sept 2023 5:49 AM IST

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உரிமையாளரின் தந்தை தலை சிதறி பலியானார். பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 இடங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

நேற்று மாலை 4 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் 4 பேர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

உரிமையாளரின் தந்தை தலைசிதறி பலி

இதில் வெடித்து சிதறிய பட்டாசுகள் இடையே சிக்கிய ஆலை உரிமையாளரின் தந்தை மணி(வயது 65) படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டு தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் ஆலையில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்த மேரிசித்ரா(35), கலாவதி (35) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன்(34) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆலையில் இருந்த 2 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

தீவிர சிகிச்சை

இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் மற்றும் வாய்மேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 3 பேரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வாய்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்