கோவில்களை பாதுகாப்பதாக கூறி சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
|கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மூன்றாவது நபருக்கு வழங்கியது மட்டுமல்லாமல் அதை கிரயம் செய்து கொடுத்திருக்கிறார் என்று கூறி அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், கோவில் நிலத்தை மூன்றாம் நபருக்கு கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். மேலும் கோவில்களை பாதுகாப்பதாக கூறி வழக்கு தொடரும் நிலையில், கோவில் சொத்துக்களை சுரண்டுவதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் அறநிலையத்துறை தரப்பு வக்கீல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அறநிலையத்துறை எடுக்கும் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மனுதாரர் மனு தாக்கல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் வெங்கட்ராமன், தன்னுடைய சகோதரர் தான் இந்த கோவில் நிலத்தை பெற்றதாகவும் கோவில் நிலத்தை திருப்பிக் கொடுக்க தான் வலியுறுத்தியதாகவும் இந்த ஆவணங்கள் உண்மையானது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட அந்த நிலம் தற்போது யார் வசம் உள்ளது என்பதை கண்டறிந்து உடனடியாக அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.