திருச்சி
விமான நிலைய சுற்றுச்சுவரை அகற்றாமல் சாலை விரிவாக்கம்
|விமான நிலைய சுற்றுச்சுவரை அகற்றாமல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கப்பணி
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட் முதல் மாத்தூர் பகுதியில் உள்ள அரைவட்ட சுற்றுச்சாலை வரை சாலையை இருபுறமும் விரிவாக்கம் செய்ய ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. மாத்தூர் அரைவட்ட சுற்றுச்சாலை முதல் விமான நிலையம் வரை சாலைகளின் இருபுறமும் 3 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர், பள்ளங்கள் தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு பல இடங்களில் தார்சாலை போடப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 4 பெரிய, 8 சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சுவர்
ஆனால் விமான நிலையம் முதல் டி.வி.எஸ். டோல்கேட் வரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இதனால் முழுமையாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் ஆங்காங்கே வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுப்பிரமணியபுரத்தில் ஒரு பகுதியில் வாய்க்கால் கட்டப்பட்டநிலையில், மறுபகுதியில் அப்பணியை தொடங்கவில்லை.
மேலும், இந்த சாலையில் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை அகற்றுவதில் சிக்கல் உள்ளதால், அப்பகுதியில் கிழக்குப்புறம் 276 மீட்டர் தொலைவுக்கு சாலையை அகலப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி, இந்த பகுதியில் மட்டும் சாலையை அகலப்படுத்தாமல் இருந்தால், அதிகளவில் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விபத்து அபாயம்
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கார் டிரைவர்கள் கூறும்போது, திருச்சி-புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் 3 மீட்டர் அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், விமான நிலைய சுற்றுச்சுவரை அகற்றாமல் இருந்தால், அப்பகுதியில் மட்டும் சாலை குறுகலாக இருக்கும். இதனால், அவ்வழியாக வரும் வெளியூர் வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் நிச்சயம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க அந்த பகுதியில் கட்டாயம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். சாமானிய மக்கள் குடியிருக்கும் வீடுகளை நோட்டீசு கொடுத்து அப்புறப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர், விமான நிலைய பகுதியை மட்டும் விட்டுவைத்து இருப்பது எந்தவகையில் நியாயம் என்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''திருச்சி -புதுக்கோட்டை சாலை விரிவாக்கப்பணியில் விமான நிலையம் பகுதியில் ஒருபுறம் சாலையை அகலப்படுத்தாமல் இருப்பதால், விபத்து நடக்க வாய்ப்புள்ளது என்பது உண்மைதான். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்'' என்றனர்.