< Back
மாநில செய்திகள்
உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

தினத்தந்தி
|
6 July 2022 11:44 PM IST

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் அருகே பொருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி மலர்(வயது 35). மாற்றுத்திறனாளி. கணவரால் கைவிடப்பட்ட இவர், திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் திரும்பி வந்த அவர், மணலூர்பேட்டையில் இருந்து சொந்த ஊருக்கு பஸ் இல்லாததால் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு முழுவதும் காத்திருந்தார்.

இதனிடையே அதிகாலையில் மயங்கி விழுந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரை, உறவினர்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். இதனிடைய அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக மலரின் அக்காள் பொன்னம்மாள், மணலூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

பிரேத பரிசோதனை முடிவு

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் மலரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில் வைத்து மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே இடத்தில் மலரின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் பாபு, மூங்கில்துறைப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். மலர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே தெரியும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்