புதுக்கோட்டை
அடக்கம் செய்த முதியவர் உடலை தோண்டி எடுத்து விசாரணை
|அறந்தாங்கி அருகே முதியவர் சாவில் சந்ேதகம் இருப்பதால் கல்லறையில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா ஏகணிவயல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 67). தொழிலாளி. இவர், கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டில் இருந்து நண்பர்களுடன் தோப்புவயலில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்ேதாணிசாமி தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நண்பர்களுடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் டாஸ்மாக் கடை அருகே தலையில் காயத்துடன் அந்தோணிசாமி இறந்து கிடந்தார்.
சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்
இதுகுறித்து நண்பர்கள் அந்தோணி சாமி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவரது உறவினர்கள் சென்று முதியவர் உடலை கைப்பற்றி 30-ந்தேதி ஏகணிவயல் ஆர்.சி. கல்லறை ேதாட்டத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் அந்தோணிசாமி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அந்தோணிசாமியின் சகோதரர் ஆபிரகாம் மற்றும் உறவினர்கள் அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து நேற்று முன்தினம் அறந்தாங்கி தாசில்தார் தலைமையில், அத்தாணி சரக வருவாய் ஆய்வாளர், ஏகணிவயல் கிராம நிர்வாக அலுவலர், மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில், அந்தோணிசாமியின் உடல் ேதாண்டி எடுக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்.சி. கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்ட முதியவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.