< Back
மாநில செய்திகள்
பொதட்டூர்பேட்டை அருகே தனியார் நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடல் தோண்டி எடுப்பு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொதட்டூர்பேட்டை அருகே தனியார் நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடல் தோண்டி எடுப்பு

தினத்தந்தி
|
14 Aug 2023 4:19 PM IST

பொதட்டூர்பேட்டை அருகே தனியார் நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடல் 130 நாட்களுக்கு பிறகு கோர்ட்டு உத்தரவுப்படி தோண்டி எடுக்கப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உடல் புதைப்பு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே நொச்சிளி ஊராட்சி விஜயமாம்பாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்முலு நாயுடு. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி உடல்நல குறைவு காரணமாக இறந்தார். அவரது உடலை உறவினர்கள் அங்குள்ள மற்றொரு உறவினரின் விவசாய நிலத்தில் புதைத்து விட்டனர். இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து ஒருவரின் பட்டா நிலத்தில் உடலை புதைக்க அனுமதிக்க முடியாது. பஞ்சாயத்துராஜ் சட்டப்படி மயானத்தில் மட்டுமே உடலை புதைக்க வேண்டும்.

தோண்டி எடுப்பு

எனவே விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து அங்குள்ள மயானத்தில் மீண்டும் புதைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறந்து போன முதியவர் நரசிம்முலு நாயுடுவின் மனைவி ஐகோர்ட்டில் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை திருத்தணி ஆர்.டி.ஓ. தீபா, பள்ளிப்பட்டு தாசில்தார் பரமசிவம், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் நரசிம்முலு நாயுடுவின் உடலை 130 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்து அங்குள்ள மயானத்தில் முறைப்படி அடக்கம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்