செங்கல்பட்டு
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் மாற்றாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி
|மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பிளாஸ்டிக் மாற்றாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வாங்கி சென்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் சார்பில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை, பாக்கு மட்டை, தட்டு, குவளை, காகித அட்டை மற்றும் தேங்காய் மட்டை ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை பேரூராட்சி இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் முன்னிலை வகித்தனர். சுற்றுலா வந்த பயணிகள் பலர் மகளிர் குழுவினரின் கை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வாங்கி சென்றனர். அப்போது, `மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தளம் என்பதால் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக உருவாக்க மகளிர் குழுவினர் இப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், அதற்கு வங்கி கடன் கிடைக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும்' என்று பேரூராட்சி இணை இயக்குனர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பி.எஸ்.பூபதி, எம்.வி.மோகன்குமார், குணசுந்தரி ரூபகாந்தன், தேவிகா ராமு, வள்ளிராமச்சந்திரன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.