சேலம்
மாநகராட்சி கூட்டத்தில் வரி நிர்ணய தீர்மானங்கள் நிறைவேற்றம்
|வரி நிர்ணய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் சேலம் மாநகராட்சி கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்தனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
வரி நிர்ணய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் சேலம் மாநகராட்சி கூட்டத்தை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்தனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி அவசர கூட்டம்
சேலம் மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சொத்து, காலி மனை உள்ளிட்ட வரிகள், பொது சீராய்வுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைவிடம், உட்கட்டமைப்பு, அடிப்படை வசதி போன்றவற்றை மையமாகக்கொண்டு கடந்த மாதம் 1-ந்தேதி முதல் புதிதாக வரிவிதிப்பு மேற்கொள்பவைகளுக்கு புதிய மண்டல அடிப்படை மதிப்பில் வரி விதித்தல்.
ஏற்கனவே உள்ள வரி விதிப்புகளுக்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு அளவீட்டின் அடிப்படையில் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் சொத்து வரி, காலிமனை வரி நிர்ணயம் செய்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க.வினர் புறக்கணிப்பு
இந்த நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாதவமூர்த்தி, செல்வராஜ், ஜனார்த்தனன், சசிகலா ஆகியோர் கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி கூட்ட மன்றத்தின் முன்பு நின்று கொண்டு வரி உயர்வை திரும்ப பெறக்கோரி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எந்த வித வரியையும் உயர்த்தாமல் சிறப்பாக ஆட்சி நடத்தினர். இந்த 10 மாத ஆட்சியில் 200 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால் மாநகராட்சி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாநகராட்சி கூட்டத்திற்குள் சென்றால் வரி உயர்வை ஏற்றுக்கொண்டதாக நினைப்பார்கள். எனவே வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து உள்ளோம் என்று கூறினர்.
உறுதிமொழி
முன்னதாக மேயர் ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.