பெரம்பலூர்
2 வீடுகளின் அருகே துப்பாக்கி குண்டுகள் கிடந்ததால் பரபரப்பு
|பெரம்பலூரில் 2 வீடுகளின் அருகே துப்பாக்கி குண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கி குண்டுகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள ஈச்சங்காடு பகுதியில் பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியில் நேற்று காலை துப்பாக்கி குண்டு ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் புஷ்பா என்பவரின் வீட்டு வாசலில் மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
போலீசார் விசாரணை
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளது. இங்கிருந்து துப்பாக்கி குண்டு வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு விழுந்து வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் அதே கிராமத்தை சேர்ந்த 2 வீடுகளின் அருகே துப்பாக்கி குண்டுகள் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.