புதுக்கோட்டை
தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
|இலுப்பூரில் கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல்:
மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே நெய்வாய்பட்டி கிராமம் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்கத்து ஊரான கதவம்பட்டியிலிருந்து சிலர் திருவிழாவிற்கு வந்துள்ளனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒருதரப்பினருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டு மோதலானது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து கதவம்பட்டி இளைஞர்கள் சிலர் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நெய்வாய்பட்டி மக்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
குடும்ப அட்டையை ஒப்படைக்க...
இந்த நிலையில் நெய்வாய்பட்டியை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் கதவம்பட்டி கிராமத்தில் தாங்கள் நடப்பதற்கும் அப்பகுதியில் உள்ள அங்காடிக்கு செல்வதற்கும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க, அட்டையை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக இலுப்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் தாசில்தார் முத்துக்கருப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.