திருச்சி
பக்தர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி கிடந்ததால் பரபரப்பு
|பக்தர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்து, நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று முன்தினம் தஞ்சாவூரை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் பேரக்குழந்தைகளுடன் சமயபுரம் வந்தனர். அன்றிரவு, சமயபுரத்தில் தங்கிய அவர்கள் நேற்று காலை முடிகாணிக்கை செலுத்திவிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பழனிச்சாமியிடம் அவரது பேரக்குழந்தைகள் தாகமாக உள்ளது என்று கூறியதால், அப்பகுதியில் ஒருவர் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை பழனிச்சாமி வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பாட்டிலின் மூடியை திறந்தபோது, பாட்டிலுக்குள் ஒரு பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து தண்ணீர் பாட்டில் விற்ற நபரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து பழனிச்சாமி சமயபுரம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார், அவரை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. பல்லி இறந்து கிடந்தது தெரியாமல் தண்ணீரை பருகி இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அச்சத்துடன் அவர் தெரிவித்தார். இதுபோன்று தரமில்லாத, பல்லி உள்ளிட்ட பூச்சிகள் இருப்பது தெரியாமல் தண்ணீர் பாட்டில் விற்கும் நிறுவனத்தின் மீது பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.