< Back
மாநில செய்திகள்
பிரிட்ஜை திறந்து சாக்லெட் சாப்பிட்டு உற்சாகம்... திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி
சென்னை
மாநில செய்திகள்

பிரிட்ஜை திறந்து 'சாக்லெட்' சாப்பிட்டு உற்சாகம்... திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி

தினத்தந்தி
|
12 March 2023 1:44 PM IST

சென்னையில் திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் நரேன் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது அறை வீட்டின் மேல் தளத்தில் உள்ளது. கீழ் தளத்தில் அவரது பெற்றோர் தங்கி வருகின்றனர்.

அவர்கள் காசிக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு நள்ளிரவு நேரத்தில் சென்னை திரும்பினர். பெற்றோர் வருவதால் வீட்டின் கதவை முன்கூட்டியே கார்த்திக் நரேன் திறந்து வைத்துவிட்டு தனது அறைக்கு தூங்க சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் படுக்கை அறைக்கு சென்றபோது கட்டில் மெத்தையில் ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் தனது மகன் கார்த்திக் நரேனை சத்தம் போட்டு அழைத்தனர். அப்போது மெத்தையில் படுத்திருந்த நபர் திடீரென்று எழுந்து மற்றொரு அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.

இதுகுறித்து கார்த்திக் நரேன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அடையார் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அறையில் பதுங்கி இருந்த நபரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஏழுமலை (27) என்பது தெரிய வந்தது. அவரது பையை சோதனையிட்டபோது அந்த வீட்டில் திருடிய ரூ.42 ஆயிரம் பணம் மற்றும் 20 யூரோ கரன்சி நோட்டுகள் இருந்தன.

அதனை பறிமுதல் செய்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி கிராமம் ஆகும். சென்னை வில்லிவாக்கம் ஜி.கே.எம்.காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளேன். அடையாறில் கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தேன். வேலை முடிந்ததும் மது அருந்தினேன். மதுபோதையில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தேன். அப்போதுதான் இந்த வீடு திறந்து கிடந்தது. உடனே உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்தேன்.

அப்போது எனக்கு பசி எடுத்தது. பிரிட்ஜை திறந்து பார்த்தபோது சாக்லெட்டுகள் இருந்தன. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் எனக்கு போதை தலைக்கு ஏறிவிட்டது. மது மயக்கத்தில் திருடிய வீட்டில் தூங்கி சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணைக்கு பின்னர் ஏழுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்