தூத்துக்குடி
திருக்கோளூரில் அகழாய்வு:பழங்கால மக்களின் வாழ்விடத்தில் 324 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
|திருக்கோளூரில் அகழாய்வில் பழங்கால மக்களின் வாழ்விடத்தில் 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அகழாய்வு
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டன.
தொடர்ந்து ஆதிச்சநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் பழங்கால மக்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக, திருக்கோளூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடத்தப்பட்டது. திருக்கோளூர் பாண்டீசுவரர் கோவில் அருகில் சுமார் 30 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொல்பொருட்கள்
திருக்கோளூரில் பழங்கால மக்களின் வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில், அங்கு சுடப்படாத செங்கல், நான்கு அடுக்கு செங்கல் கட்டுமானம், சுடுமண் குழாய்கள், அடுப்பு, பானை ஓடுகள் போன்றவை கண்டறியப்பட்டன. மேலும் அங்கு பல வண்ண பாசிகள், இரும்பு பொருட்கள், செம்பு காசுகள், சுடுமண் உருவங்கள், இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், சீன பானை ஓடுகள் உள்ளிட்ட மொத்தம் 324 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''திருக்கோளூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் பழங்கால மக்களின் வாழ்விடம் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை ஆய்வுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும், லக்னோ ஆய்வகத்துக்கும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இங்கு வாழ்ந்த பழங்கால மக்களின் தொன்மை கணிக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அகரத்திலும் பழங்கால மக்களின் வாழ்விடங்களைக் கண்டறிவதற்காக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.