சிவகங்கை
கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி
|கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
திருப்புவனம்
கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
9-ம் கட்ட அகழாய்வு பணி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏற்கனவே நடைபெற்ற 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதேபோல் கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று செப்டம்பர் மாதம் முடிந்தன. தற்போது 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடியில் 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவிற்கு கீழடி அகழாய்வு தளத்தில் உள்ள திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே காணொலி காட்சி மூலம் காண்பதற்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, தொல்லியல் பிரிவு கீழடி இணை இயக்குனர் ரமேஷ், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், கொந்தகை ஊராட்சி தலைவர் தீபலெட்சுமிஜெயவேல், கழுகேர்கடை ஊராட்சி தலைவர் (பொறுப்பு) ரேவதி ராஜேஷ் கண்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குழி தோண்டும் பணி
சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு வந்த கலெக்டரை தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் வரவேற்றனர். பின்பு தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியை ஆரம்பித்து வைத்து, அகழாய்வு நடைபெற உள்ள இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறும் இடம் வீரணன் என்பவருக்கு சொந்தமான இடமாகும். இங்கு முதலில் சுமார் 25 சென்டில் 16 குழிகள் தோண்ட அளவீடு செய்து திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கூடுதல் குழிகள் தோண்டும்போது தேவைக்காக அருகே உள்ள இடத்தையும் சுத்தப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
கீழடியில் பணிகள் ஆரம்பித்த பின்பு கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து பணிகள் தொடங்கவிருக்கிறது எனவும் தெரிய வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடையும். இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் பணி தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை
கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கு தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி வரும் கீழடி அருங்காட்சியகத்திற்கு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, கீழடி அருங்காட்சியகத்திலும் பின்பற்றும் பொருட்டு, வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை அளித்தும் அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளித்தும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.