< Back
மாநில செய்திகள்
கோட்டையின் கட்டுமானத்தை அறிய குழிகள் தோண்ட ஆய்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கோட்டையின் கட்டுமானத்தை அறிய குழிகள் தோண்ட ஆய்வு

தினத்தந்தி
|
30 Aug 2023 6:23 PM GMT

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியில் கட்டுமானத்தை அறிய 7 குழிகள் தோண்ட ஆய்வு செய்யப்படும்.

அகழாய்வு பணி

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி தொல்லியல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகழாய்வு 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை திடல் என்னும் இடத்தில் 14 குழிகள் அமைத்து அவற்றுக்கான அகழியில் 1 குழி அமைத்து என 15 குழியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இதில் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்டமாக கோட்டை கரை என்னும் இடத்தில் தற்போது கோட்டையின் கட்டுமானத்தை அறிந்து கொள்ளும் வகையில் வடக்கு கோட்டை கரையில் குழிகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக அளவிடும் பணியும் குழிகள் அமைக்கும் முன்னேற்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

7 குழிகள்

இதுகுறித்து தொல்லியல் துறை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை கூறுகையில், "2.5 கி.மீ. சுற்றளவு கொண்ட கோட்டை சுவரானது பல்வேறு இடங்களில் உயர்வாகவும், தாழ்வாகவும் காணப்படுகிறது. இதில் வடக்கு பகுதியில் சுமார் 5 மீட்டர் உயரம் கொண்டதாகவும் ஒட்டுமொத்த கோட்டையின் உயரமானது மண் மேட்டு சுவராகவும் காணப்படுகிறது.

இந்த மண் மேட்டு சுவரின் மேல் மட்டத்தில் சுமார் 1 மீட்டர் அகலத்தில் நீளமான செங்கல் கட்டிடமானது கோட்டை சுவராக காட்சியளிக்கிறது. இதில் ஆங்காங்கே கோட்டை கொத்தளங்களும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கோட்டை சுவர் எவ்வாறு அமைந்துள்ளது மற்றும் உயரமான கட்டுமான அமைப்பினை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த அகழாய்வு குழியானது அமைக்கப்பட உள்ளது. சுமார் 6 முதல் 7 குழிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்படுத்தப்பட உள்ள அகழாய்வு குழியானது படிக்கட்டு போன்ற அமைப்பில் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்படும்'' என்றார்.

மேலும் செய்திகள்