< Back
மாநில செய்திகள்
மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
13 Oct 2022 6:55 AM IST

மாதவரம் பால் பண்ணையில் இருந்து மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் எந்திரத்தின் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரூ.61 ஆயிரத்து 841 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் 3-வது வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் முக்கியமான பணியான சுரங்கம் தோண்டும் பணி தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் நடக்கிறது.

இந்த பணியின்போது சுரங்கம் தோண்டும் எந்திரத்தை மாதவரம் பால் பண்ணை அருகில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் மாதவரம் பால் பண்ணையில் இருந்து புரசைவாக்கம் நோக்கி சுரங்கம் தோண்டி கொண்டு வர உள்ளது.

தேவையான 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே மாதவரம் கொண்டு வரப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாதவரம்-சிப்காட் வரை 47 கி.மீ. நீளம் அமையவுள்ள தடத்தில் 30 சுரங்க ரெயில் நிலையங்கள் உள்பட 50 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வர உள்ளன. சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டத்தில் இரட்டை சுரங்கங்கள் தோண்டுவதற்காக 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 47 கி.மீ. நீள தடத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 2026-ம் ஆண்டுக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்