கர்ப்பிணி பெண்களுக்கு ஆயுஷ் படிப்பு படித்தவர்கள் பரிசோதனை - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|பாலின நிர்ணயத்தில் ஈடுபடாதவரை தங்களை பரிசோதிக்க அனுமதிப்பதில் தவறில்லை என ஆயுஷ் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற மருத்துவப் படிப்புகளை படித்தவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கான அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய தகுதியற்றவர்கள் என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆயுஷ் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலின நிர்ணயத்தில் ஈடுபடாதவரை தங்களை பரிசோதிக்க அனுமதிப்பதில் தவறில்லை என ஆயுஷ் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆயுஷ் படிப்புகளுக்கான பாடத்திட்டம் ஈ.சி.ஜி., எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் ஆகியவற்றை உள்ளடக்கியது என இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.