தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வை 5,236 பேர் எழுதினர்
|தர்மபுரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பதவிகளுக்காக தேர்வை 5,236 பேர் எழுதினார்கள்.
எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் படை நிலைய அலுவலர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 4,843 ஆண்கள், 1,316 பெண்கள் என மொத்தம் 61,59 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் 4,140 ஆண்களும், 1,096 பெண்களும் என மொத்தம் 5,236 பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 703 ஆண்கள், 220 பெண்கள் என மொத்தம் 923 பேர் தேர்வை எழுதவில்லை.
டி.ஐ.ஜி.ஆய்வு
இந்த தேர்விற்காக தர்மபுரி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை முதன்மை எழுத்து தேர்வும், பிற்பகலில் தமிழ்த்தாள் தேர்வும் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற மையங்களை காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.