தயாநிதிமாறன் எம்.பி. வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் அபேஸ்; 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணை
|தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் ரூ.1 லட்சம் பணம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி பற்றி ‘சைபர் கிரைம்' போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நவீன மோசடிகள்
'டிஜிட்டல்' மயமான உலகில், மோசடி செயல்கள் 'ஹைடெக்' ஆகி உள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 'உங்கள் கணக்கு எண் விவரங்களை 'அப்டேட்' செய்ய வேண்டும்' என்று அப்பாவி மக்களை ஏமாற்றி, 'ஓ.டி.பி.' எண்ணை பெற்று பண மோசடி செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதே பாணியில், 'நீங்கள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை. குறிப்பிட்ட 'லிங்க்'கில் சென்று பணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என்று குறுந்தகவல் அனுப்பியும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சட்டென்று எடுக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
தயாநிதி மாறனிடம் கைவரிசை
இந்த நிலையில் மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனிடம் 'சைபர்' மோசடி பேர்வழிகள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வங்கி பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட தயாநிதி மாறன் எம்.பி. வங்கி கணக்கு விவரங்களை தராமல் அந்த இணைப்பை துண்டித்து விட்டார். ஆனால் அடுத்த சில நொடிகளில் தயாநிதி மாறன் எம்.பி.யின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 999 பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் இடம் பெற்றிருந்தது.
போலீசார் விசாரணை
இந்த மோசடி சம்பவம் குறித்து தயாநிதி மாறன் எம்.பி., சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் புகார் தெரிவித்தார். வங்கி விவரங்கள், ஓ.டி.பி. எண் எதையும் பகிராமல் தனது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டது குறித்து தயாநிதி மாறன் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பதிவிட்டார்.
புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.