ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை : 4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது
|தாம்பரத்தில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய இளம்பெண், இதுவரை 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்தது தெரிந்தது. உடந்தையாக இருந்த 2-வது கணவரும் கைதானார்.
தாம்பரம்
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவர், சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
அப்போது தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு மாவு பொருட்கள் வினியோகம் செய்யும்போது அங்கு வேலை செய்து வந்த அபிநயா என்ற கயல்விழி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அப்போது அபிநயா, தனது பெற்றோருடன் தகராறு செய்து சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறேன். இதனால் பெற்றோருடன் பேசுவது இல்லை என்றார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா, அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.
கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் புதிய பட்டுப்புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். அப்போது அபிநயாவின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றினர். அதில், மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.
இந்தநிலையில் அபிநயா, சமூகவலைதளங்களில் பல்வேறு பெயர்களில் தீவிரமாக செயல்பட்டு வருவதை சைபர் கிரைம் போலீசார் மூலமாக கண்டுபிடித்தனர். அதை வைத்து நடத்திய விசாரணையில் அபிநயா தற்போது சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்றபோது, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி அபிநயா மதுரைக்கு சென்றிருப்பது தெரிந்தது. இதற்கிடையில் நேற்று மீண்டும் விடுதிக்கு திரும்பி வந்த அபிநயாவை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை தாம்பரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மதுரை அரிசிக்கார தெருவைச் சேர்ந்த அபிநயா, 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருடைய தந்தை அய்யப்பன், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர்.
அபிநயாவுக்கு 2011-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த விஜய் என்பவரை அவரது பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் தன்னைவிட வயது மூத்தவர் எனக்கூறி அவருடன் தகராறு செய்த அபிநயா, ஒரு ஆண்டுக்குள் அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பிறகு சிவகங்கை பகுதியில் நகை கடையில் வேலை பார்த்தபோது, 2013-ம் ஆண்டு அதே கடையில் தன்னுடன் வேலை பார்த்த செந்தில்குமார் (33) என்பவரை 2-வது திருமணம் செய்தார். அவர் மூலம் அபிநயாவுக்கு 2015-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 4 மாதங்களில் குழந்தை மற்றும் கணவரை பரிதவிக்க விட்டு விட்டு அபிநயா மாயமானார்.
இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசார் விசாரணை நடத்திய போது, மதுரையில் அவருடன் கம்ப்யூட்டர் வகுப்பு பயின்ற பிரபு என்பவருடன் ஒருவாரம் உல்லாச பயணமாக கேரளா சென்றது தெரியவந்தது. போலீசார் 10 நாட்களில் அபிநயாவை கண்டுபிடித்து கொடுத்தனர்.
பின்னர் குடும்பத்துடன் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து வசித்து வந்தனர். அங்கு பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, உதயா என்பவருடன் அபிநயாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் மதுரை திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி 2-வது முறையாகவும் அபிநயாவை கண்டுபிடித்து கொடுத்தனர்.
அதற்கு பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் அபிநயா மாயமானார். இந்த முறை செந்தில்குமார் போலீசில் புகார் செய்யவில்லை. இதையடுத்து அபிநயா, சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.
அப்போது ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 3-வதாக திருமணம் செய்து 10 நாட்கள் மட்டுமே அவருடன் இருந்தார். மீண்டும் அவரையும் ஏமாற்றி நகை, பணத்துடன் மாயமானார்.
ஆட்டோ டிரைவர் பல இடங்களில் தேடிய போதுதான் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் அபிநயா வேலை செய்வதை கண்டுபிடித்தார். ஆனால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி அவருடன் செல்ல அபிநயா மறுத்துவிட்டார்.
அப்போதுதான் அந்த பேக்கரிக்கு கோதுமை மாவு வினியோகம் செய்ய வந்த நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பதுபோல் நடித்து அவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டதும், பின்னர் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.
நடராஜன் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பி ஓடிய அபிநயா, திருச்சியை சேர்ந்த அமீர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் 10 நாட்கள் தங்கி இருந்தார். அதன்பிறகு அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையில் அபிநயா நகை, பணத்துடன் மாயமான செய்திகள் டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் வெளியானது. இதை பார்த்த அவரது 2-வது கணவர் செந்தில்குமார், அபிநயாவை தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன்பிறகு மீண்டும் 2-வது கணவருடன் சென்ற அபிநயா, அவர் மூலமாக அந்த நகையை விற்று உல்லாசமாக செலவு செய்து வந்தார்.
மீண்டும் அடுத்தகட்ட மோசடிக்கு தயாராக வேண்டி செம்மஞ்சேரி பகுதியில் பெண்கள் விடுதியில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்தபோதுதான் போலீசில் சிக்கிக்கொண்டார். தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த அபிநயா, மேலும் பலருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். அவரிடம் ஏமாந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும், ஆனால் தற்போது நடராஜன் மட்டும் புகார் செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைதான அபிநயாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 36 ஆயிரம், எல்.இ.டி. டி.வி., 20 கிராம் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாட்ஸ் அப்' அழைப்புகளையே பயன்படுத்தினார்
32 சிம் காடுகள் மூலம் செல்போன் எண்களை தொடர்ந்து மாற்றி வந்த அபிநயா, பெரும்பாலும் 'வாட்ஸ் அப்' அழைப்புகளையே பயன்படுத்தி வந்துள்ளார். செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக அடிக்கடி புத்திசாலித்தனமாக நம்பரை மாற்றி வந்தாலும் சமூகவலைதளங்களில் பல பெயர்களில் தீவிரமாக இருப்பதை சைபர் கிரைம் போலீசார் ஐ.பி. முகவரி மூலம் கண்டுபிடித்து அபிநயாவை பொறி வைத்து பிடித்தனர்.
32 சிம் கார்டுகள் பறிமுதல்
கைதான அபிநயாவிடம் இருந்து 32 சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிநயா தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி 32 சிம்கார்டுகள் வாங்கி பலரை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். நடராஜனை தீவிரமாக காதலிப்பது போல் நடித்துக்கொண்டே தற்போது வெளிநாட்டில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த அமீர் என்பவருடனும் பேசி வந்துள்ளார்.
ஒரே நேரத்தில் 2 பேருடன் செல்போனில் பேசி வந்தாலும் நடராஜனை திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் மாயமானார். பின்னர் ஏற்கனவே தொடர்பில் இருந்த திருச்சி வாலிபருடன் தங்கி பொழுதை கழித்து உள்ளார்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை சீரழித்து கொண்டார்
அபிநயா முறைப்படி திருமணம் செய்தாலும் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். ஆடம்பரமாக வாழ எண்ணியே இதுபோல் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளார். தனது காதல் வலையில் சிக்குபவர்களிடம் உள்ள பணத்தை நன்றாக அனுபவித்துவிட்டு அதன் பிறகு அடுத்த வாலிபரை தனது காதல் வலையில் வீழ்த்த தயாராகி விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது வாழ்க்கையை சீரழித்து கொண்டார்.