அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணமோசடி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னாள் கார் டிரைவர் கைது
|அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பட்டிணத்தை சேர்ந்த சுதாகரன் என்பவர், அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த எஸ்பி.வேலுமணியிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, சேலம் மணியனூரை சேர்ந்த தேன்மொழி உட்பட 10 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி, சுமார் 37 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
பின்னர் அவர்களிடம், பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிவதற்கான போலி பணி நியமன ஆணையை சுதாகரன் வழங்கியுள்ளார். இந்த நிலையில், பணம் கொடுத்து ஏமாந்த தேன்மொழி என்ற பெண், சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை செய்தபோது, சுதாகரனும், அவரது மனைவி பிரபாவதியும் சேர்ந்து, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றது உறுதியானது. அதனைத் தொடர்ந்து சுதாகரனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி பிரபாவதியை தேடி வருகின்றனர்.