
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்

கொரோனா பாதிப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மீண்டுவிட்டதாக போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 15-ந்தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அன்றைய தினம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சென்னை, போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டார்
இதுதொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணம்
அடைந்துவிட்டார். இருதய பாதிப்பு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இருதய பாதிப்பில் இருந்தும் மீண்டு வருகிறார்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
2 நாளில் டிஸ்சார்ஜ்
இதேபோல, நேற்று காலை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் பரவியது. இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் நலமுடன் இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் நேற்று வெளியிட்டு விளக்கம் அளித்தார். வீடியோ வாயிலாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்' என்று தெரிவித்து உள்ளார்.