< Back
மாநில செய்திகள்
திமுக ஆட்சியில் எல்லாம் டூப்ளிகேட் தான், எதுவும் ஒரிஜினல் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மாநில செய்திகள்

'திமுக ஆட்சியில் எல்லாம் டூப்ளிகேட் தான், எதுவும் ஒரிஜினல் இல்லை' - எடப்பாடி பழனிசாமி பேச்சு

தினத்தந்தி
|
13 Jun 2022 11:28 AM GMT

திமுக ஆட்சியில் எல்லாம் டூப்ளிகேட் தான், எதுவும் ஒரிஜினல் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிலவாரப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், வீரபாண்டி எம்ஏல்ஏ ராஜா என்கிற ராஜமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.

பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வக்கீல் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தாத ஒரே ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விளம்பரப் பிரியர். உடற்பயிற்சி செய்வது, டீக்கடையில் டீ குடிப்பது என விளம்பரம் செய்து வருகிறார்.

திமுக ஆட்சியில் எல்லாம் டூப்ளிகேட் தான், எதுவும் ஒரிஜினல் இல்லை, திமுக கட்சி ஆட்சியும் ஒரிஜினல் இல்லை .மேலும் மக்கள் மீது சுமைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சொத்துவரி அதிமுக ஆட்சியில் உயர்த்தவில்லை. தற்பொழுது இந்த ஆட்சியாளராகள் வந்தவுடனே வரியை உயர்த்தி விட்டார்கள்.

தினந்தோறும் கொலை, கொள்ளை திருட்டு நடைபெற்று வருவதால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். போதை பொருட்கள் அதிகம் விற்பனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

சட்ட ஒழுங்கும் முழுமையாக சீரழிந்துவிட்டது. காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். மின்சாரம்தான் ஒரு நாட்டிற்கு வளர்ச்சிக்கு ஆதாரம். தற்போது திமுக ஆட்சியில் எப்பொழுது மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. மின்சார கட்டணம் உயர்வு தமிழகத்தில் வரவுள்ளது.

திமுகவில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் இல்லை. உதயநிதி, சபரீசன், துர்காஸ்டாலின் என மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். தமிழத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதனை நம்பி மக்கள் ஓட்டளித்தனர். தற்பொழுது அதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.

காலத்திற்கேற்ற கல்வி கொடுத்து அதற்காக மடிக்கணினியை கொடுத்தோம். அந்த அற்புதமான திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவரும், மருத்துவர் ஆகலாம் என்பதையும், அதிமுக ஆட்சிதான் செயல்படுத்திக் காட்டினோம்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் எதுவும் கவனிக்கவில்லை. இன்றைய முதல்வருக்கு எதுவும் தெரியவில்லை. குடும்ப நலமும், குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே வளரவேண்டும். குடும்பத்திலிருந்து மட்டுமே பதவிக்கு வரவேண்டும். எனவே கருணாநிதி, உதயநிதி என நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது.

திமுக என்ன ராஜ பரம்பரையா? அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் கூட முதல்வராக வர முடியும். அதிமுகவில் உள்ளவர்கள் உழைப்பிற்கும், விசுவாசத்திற்கும் உயர்ந்த பதவி கிடைக்கும் அதற்கு நானே உதாரணம்.

சேலம் மாவட்டத்தில் இருந்த ஒருவர் தமிழக முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சியை தந்தேன். ஆனால் திமுக ஆட்சியில் ஸ்டாலின் முதல்வராக இருந்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்