< Back
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்துக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை
சிவகங்கை
மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்துக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை

தினத்தந்தி
|
22 July 2023 12:30 AM IST

கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகிற 1-ந்தேதி முதல் இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

திருப்புவனம்

கீழடி அருங்காட்சியகத்துக்கு வருகிற 1-ந்தேதி முதல் இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அருங்காட்சியகம்

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றியதில் கீழடிக்கு பெரும் பங்கு உண்டு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.

இங்கு சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மக்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழடி தோன்றிய வரலாறு குறித்து அங்குள்ள சிறிய திரையரங்கத்தில் படமாக ஒளிபரப்பப்படுகிறது. இதில் 50 பேர் வரை அமர்ந்து குளிர்சாதன வசதியுடன் கீழடி வரலாற்றை பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளன.

கட்டண முறை

கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி உள்நாட்டில் உள்ள பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம், மாணவர்களுக்கு ரூ.5-ம், வெளிநாட்டை சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறியவர்களுக்கு ரூ.25-ம், போட்டோ எடுக்க ரூ.30-ம், வீடியோ எடுக்க ரூ.100 என கட்டண முறை வசூல் செய்யப்பட்டது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவ-மாணவியர், சுற்றுலா பயணிகள், உள்நாட்டினர், வெளிநாட்டினர் என பார்வையிட்டு வந்தனர்.

விடுமுறை மாற்றம்

இந்த நிலையில் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுமுறை விடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது வாரத்தின் இறுதி நாட்களில் சனி, ஞாயிறு பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் (7 மணி வரை) கூடுதலாக நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருங்காட்சியகத்திற்கு தற்போது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் அருங்காட்சியகத்திற்கு வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை விடப்படும் எனவும் அரசு முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது கீழடியில் 9-ம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. குழி தோண்டும் அகழாய்வு பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்