மதுரை
2 அமைச்சர்கள் இருந்தும் புதிய திட்டங்கள் வரவில்லை-செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
|மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு உள்ளது. 2 அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு உள்ளது. 2 அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
தினமும் குடிநீர்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் காலோனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநகர மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்து விட்டது. மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு உள்ளது. அதனை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. இந்த சீர்கேட்டினை தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு மற்றும் ம.தி.மு.க. கட்சியே கண்டிக்கிறது. மாநகருக்கு குடிநீர் வழங்கும் முல்லை பெரியாறு, வைகை அணையில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. ஆனால் இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீரிலும் சாக்கடை கலக்கிறது. இந்த நீரை எப்படி மக்களால் குடிக்க முடியும்?. இந்த பிரச்சினைக்கு போர்கால அடிப்படையில் மாநகராட்சி தீர்வு காண வேண்டும் அதே போல் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை மட்டுமின்றி, அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஓடுகிறது. அதற்கு காரணம், கழிவு நீரேற்று நிலையத்தில் உள்ள மோட்டார்கள் அடிக்கடி பழுதாவது தான். எனவே தற்போதைய தேவைக்கு ஏற்ப புதிய மோட்டார்கள் பொருத்த வேண்டும். பெரும்பாலான சாலைகள் மேடும், பள்ளமாக உள்ளது. தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. எனவே மக்களின் இந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநகராட்சி பணியாற்ற வேண்டும்.
2 அமைச்சர்கள்
தி.மு.க. அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் மதுரையில் கலைஞர் நூலகத்தை தவிர வேறு திட்டத்தையும் தொடங்க வில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டிய திட்டங்களை தான் தற்போது தொடங்கி வைத்து கொண்டு இருக்கிறார்கள். மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் இருக்கிறார்கள். 2 பேர் இருந்தும் மதுரை மாநகருக்கு ஒரு திட்டமும் வரவில்லை. நான் அமைச்சராக இருந்த போது, வைகை ஆற்றை தேம்ஸ் நதிக்கரை போல் கொண்டு வருவேன் என்றேன். அதற்கு என்னை கேலி, கிண்டல் செய்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் இன்று வைகை கரையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டன.
மதுரை மேயர் செயல்படாத மேயராக இருக்கிறார். எனவே அவரை சந்தித்து கோரிக்கை வைப்பது பலனற்றது. நிதி அமைச்சர் சுயாட்சி பேசுகிறார். அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்து விட்டதாக குற்றம் சுமத்துகிறார். ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிக எண்ணிக்கை கொண்ட அ.தி.மு.க.விற்கு அலுவலகம் ஒதுக்கவில்லை. மாமன்றத்தில் கவுன்சிலர்களுக்கு இருக்கை ஒதுக்கவில்லை. உள்ளாட்சி பிரதிதிகளுக்கு உரிய அங்கீகாரம் தராமல் இருப்பது தான் திராவிட மாடலா?.
போராட்டம்
ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிக மந்தமாக நடக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன காப்பகம், தமுக்கம் கலையரங்கத்தை எப்போது திறப்பார்கள் என்று தெரியவில்லை. இவற்றை பணிகள் முடித்து திறக்காமல் இருப்பதால் மாநகராட்சி வருவாய் தடுக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு கட்டிடங்களில் இருந்து வரவேண்டிய சொத்து வரியை முதலில் வசூலிக்க வேண்டும். இந்த தொகையை நிலுவை வைத்து விட்டு, மக்களின் சொத்து வரியை அதிகரிப்பது ஏற்புடையது அல்ல. மக்கள் பணிகளில் மாநகராட்சி அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. சார்பாக போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக நிருபர்கள், அவரிடம் அ.தி.மு.க.பொதுக்குழு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜூ, மதுரை மக்களின் பிரச்சினையை தீர்க்க தான் மாநகராட்சிக்கு வந்து மனு கொடுத்து இருக்கிறேன்.
அரசியல் தொடர்பான கேள்விகளை கட்சி அலுவலகத்தில் பேசுகிறேன் என்றார்.