< Back
மாநில செய்திகள்
கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோடு மாநகரில் சுட்டெரிக்கும் வெயில்;தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்
ஈரோடு
மாநில செய்திகள்

கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோடு மாநகரில் சுட்டெரிக்கும் வெயில்;தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகம்

தினத்தந்தி
|
3 March 2023 9:30 PM GMT

கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோடு மாநகரில் வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் விரும்பி சாப்பிடுவதால் விற்பனை அமோகமாக உள்ளது.

கோடை காலம் தொடங்கும் முன்பே ஈரோடு மாநகரில் வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் விரும்பி சாப்பிடுவதால் விற்பனை அமோகமாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

கோடை காலம் என்பது பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். கோடை காலம் தொடங்க இன்னும் 1 மாதம் இருக்கும் நிலையில் தற்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் 95 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மதிய நேரத்தில் ரோட்டில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நின்று செல்லும்போது கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2 மாதங்களுக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழ ஜூஸ், தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

விற்பனை அமோகம்

இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியிலும், கடைகளிலும் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் மற்றும் தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

தர்ப்பூசணி பழம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு துண்டு தர்ப்பூசணி ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளரி பிஞ்சு ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வு

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, 'கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் ஈரோடு மாநகர் பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து தர்ப்பூசணி மற்றும் வெள்ளரி பிஞ்சுகள் விற்பனைக்கு வந்துள்ளன. தர்ப்பூசணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பே விற்பனைக்கு வந்துவிட்டது.

வெள்ளரி பிஞ்சு இப்போது தான் விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது. வரத்து அதிகமானால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இதேபோல் ஆப்பிள், ஆரஞ்சு, முலாம்பழம், திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் தற்போது அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பழங்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது' என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்