எரிசக்தி விலை உயர்வால் ஐரோப்பாவின் மொத்த பணவீக்கம் உயர்வு - சர்தேச நாணய நிதியம் தகவல்
|2022-ல் முழு ஐரோப்பாவிலும் அன்றாட வாழ்க்கை செலவு 7% உயரும் என்று சர்தேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் எரிசக்தி விலை உயர்வால் ஐரோப்பாவின் மொத்த பணவீக்கம் 6% உயர்ந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஆல்பிரட் கேமர் தெரிவித்துள்ளார். மேலும் எரிபொருள் விலை உயர்வால் 2022-ம் ஆண்டில் முழு ஐரோப்பாவிலும் அன்றாட வாழ்க்கை செலவு 7% உயரும் என்றும் அவர் கூறினார்.
அதே போல் எரிசக்தி விலை உயர்வால் தொழில் நிறுவனங்களின் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரித்திருப்பது, ஐரோப்பிய பணவீக்கத்தை மேலும் தீவிரமாக்கும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2022-ம் ஆண்டில் உள்ள 3.2%-ல் இருந்து 2023-ம் ஆண்டில் 0.6% ஆக குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.