< Back
மாநில செய்திகள்
மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பது வரவேற்கத்தக்கது:  பொதுமக்கள் கருத்து
கரூர்
மாநில செய்திகள்

மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பது வரவேற்கத்தக்கது: பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
12 Oct 2022 7:35 PM GMT

கரூர் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பது வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கணக்கெடுப்பு பணி

கரூர் மாவட்டம், கரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடவூர் வனப்பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் மற்றும் நத்தம் வனச்சரகத்தில் அரிய வகை உயிரினமான தேவாங்கு வாழ்ந்து வருகிறது. அந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தேவாங்கு சரணாலயம் அமைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான ஆயத்த பணிகள் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேவாங்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

அரசிற்கு அறிக்கை

இதில் கடவூர் காப்புக்காடு பகுதிகளில் அதிக அளவில் தேவாங்கு வசிப்பதாக கூறினாலும், அதற்கான கணக்கெடுப்பு முறையாக மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து திண்டுக்கல் மற்றும் கரூர் வனசரக பகுதிகளில் கோவை மாவட்டம் ஆனைகட்டி சேக்கான் பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தினர் வனத்துறையினர் உதவியுடன் முதல் முறையாக தேவாங்கு கணக்கெடுப்பு பணியை தொடங்கினர். அதற்காக 0.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தேவாங்கு வாழும் பகுதிகளில் தலா 4 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு தேவாங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதன் பிறகு தேவாங்கின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழக அரசு அழிந்து வரும் அரியவகை உயிரினமான தேவாங்கு வாழும் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூச்ச சுபாவம் ெகாண்டவை

அழிந்து வரும் தேவாங்கு இனமானது வன பாதுகாப்பு சட்டத்தின்படி அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள புலி, சிங்கம் ஆகியவற்றின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. சிவப்பு நிற தேவாங்கு மற்றும் சாம்பல் நிற தேவாங்கு என 2 வகையான தேவாங்குகள் இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. பாலூட்டி வகை விலங்குகான தேவாங்கு 18 முதல் 28 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

இவற்றின் எடை 85 முதல் 350 கிராம் வரை மட்டுமே இருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் வந்து இரை தேடும் பழக்கம் கொண்ட தேவாங்கு, பல நேரங்களில் மரக்கிளைகளில் கூட்டமாக தங்கி வாழ்கின்றன. மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை என்பதால் மனிதர்களை பார்த்ததும் பதுங்கி விடுகின்றன.

11,806 எக்டேர் காடுகள்

12 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய அரிய வகை உயிரினமான தேவாங்கினை பாதுகாக்கும் வகையில் கடவூர், அய்யலூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சரணாலயம் அமைக்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் 5700.18 எக்ேடர் காடுகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 6106.38 எக்டேர் காடுகளும் என மொத்தம் 11,806.56 எக்டேர் பரப்பளவில் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது.

விவசாயிகளின் நண்பன்

வன அதிகாரி ஒருவர் கூறுகையில், கடவூர் வனப்பகுதியில் சுமார் 8 ஆயிரம் தேவாங்குகள் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மேலும் இப்பகுதி காப்புக்காடு என அழைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.

விவசாயி வெங்கட்ராமன் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் தேவாங்கு சரணாலயம் அமைப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தேவாங்குகள் விவசாயத்திற்கு தீங்கு செய்யும் பூச்சிகள், புழுக்களை உண்டு வாழக்கூடியவை. இதனால் விவசாய செடிகளை அழிக்கும் புழு, பூச்சிகள் அழிந்துவிடும். இதனால் தேவாங்குகளை விவசாயிகளின் நண்பன் என கூறலாம், என்றார்.

மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர் மேலை பழனியப்பன் கூறுகையில், அழிந்து வரும் வன விலங்குகளில் ஒன்றான தேவாங்கு கரூர் மாவட்டம் கடவூர் வன பகுதிகளில் மிக குறுகிய அளவில் வாழ்ந்து வந்தது. அவற்றை பாதுகாக்கும் பொருட்டும், பிற்கால சந்ததியர்கள் தேவாங்கு குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இந்த சரணாலயம் அமைவது மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பு, என்றார்.

மேலும் செய்திகள்