பெரம்பலூர்
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை-பேச்சு போட்டிகள்; 12-ந் தேதி நடக்கிறது
|பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை-பேச்சு போட்டிகள் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளன்று இனி 'தமிழ்நாடு நாள் விழா' கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 12-ந்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்க 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டிக்கு வர வேண்டும். 'தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், 'தமிழ்த் திரை உலகத்தை புரட்டி போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்' என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் கட்டுரை, பேச்சு போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.