வேலூர்
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
|வேலூரில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
வேலூரில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
கட்டுரை போட்டிகள்
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கட்டுரை போட்டியில் 26 மாணவ- மாணவிகளும், பேச்சுப்போட்டியில் 27 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், எல்லைப்போர் தியாகிகள், சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
பரிசு
இந்த போட்டிகளை தலைமை ஆசிரியர்கள் பழனி, சிவவடிவு மற்றும் தமிழ்வளர்ச்சி துறை ஊழியர்கள் கண்காணித்தனர். 6 பேர் கொண்ட நடுவர் குழுவினர் மாணவ-மாணவிகளை தேர்வு செய்தனர். முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசாகவும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும், அதில் வெற்றி பெற்றால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் அவரிடம் பரிசு பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.