திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் துவக்கப்படும் - மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் தெலி
|திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் துவக்கப்படும் என மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் திருப்பூரில் நூறு படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அது விரைவில் துவக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
சென்னை அருகே கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தொழிலாளர் நலன் துறை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் ராணிப்பேட்டையில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பீடி தொழிலாளர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு தொழிலாளர் நலன் இயக்குனரகம் மூலமாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். பீடி தொழிலாளர்களுக்கான 22 மருந்தகங்கள் மற்றும் ஒரு மத்திய மருத்துவமனை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வருவதாக குறிப்பிட்டார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் புதிய வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் நிறுவனங்களில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு 6700 கோடிக்கும் மேல் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகளுக்கு கிட்டத்தட்ட 787 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இபிஎப் சார்பில் பிரயாஸ் என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன்படி ஒரு தொழிலாளர் ஓய்வு பெறும் நாளன்று அவருக்கு சேர வேண்டிய வருங்கால வைப்புநிதி மொத்தமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக இ ஷ்ரம் தளம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதில் இணைபவர்களுக்கு ரு. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், இந்த தளத்தில் பதிவு செய்துள்ள 28 கோடி பேரில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். அனைத்து தொழிலாளர்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவின் தொழிலாளர்கள் நலனுக்காக இ எஸ் ஐ சி 2.0 திட்டத்தை முன்னெடுத்து பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த நிகழ்ச்சியில் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் இஎஸ்ஐ சந்தாதாரர்கள் ஒன்பது பேருக்கு தலா 40 ஆயிரம் மதிப்புள்ள ஹீமோபிலியா மருந்தை வழங்கிய மந்திரி E - Shram அட்டை, கொரோனாவால் இறந்த இஎஸ்ஐ சந்தாதாரர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி ஆகியவற்றையும் வழங்கினார்.