பெரம்பலூர்
எசனை வேணுகோபால சுவாமி கோவில் தேரோட்டம்
|பெரம்பலூர் அருகே எசனை வேணுகோபால சுவாமி கோவில் தேரோட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேணுகோபாலசுவாமி கோவில்
பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவில் அன்னம், சிம்மம், அனுமந்தர், சந்திரன், கருடன், யானை, நாகபாஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும், சக்கரத்தாழ்வார் திருவீதி உலாவும் நடந்தது.
இதையடுத்து, கடந்த 16-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வேணுகோபாலசுவாமி- பாமா, ருக்மணி காலை 11 மணியளவில் எழுந்தருளினர். பின்னர் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 5 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரசுப்ரமணியன் (மலைக்கோட்டை), லட்சுமணன் (திருச்சி), கோவில்ஆய்வாளர் வினோத்குமார், கோவில் செயல் அலுவலர் தேவி, கோவில் தக்காருமான ஹேமாவதி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சூரிய வாகனத்தில் வீதியுலா
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.
வருகிற 25-ந்தேதி திருத்தேர் 8-ம் திருவிழா நடக்கிறது. அன்றைய உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.