மதுரை
அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் பிழைகள்: தமிழை வதைப்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்
|அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன என்றும், தமிழை வதைப்பதை ஏற்க முடியாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.
அதிகாரியின் எழுத்துப்பிழை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் பெயரில் உள்ள மின் இணைப்புக்கான மீட்டர் பழுதாகி உள்ளது. பழுதான மின் மீட்டரை மாற்றி தவறான மின் கணக்கீட்டை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் செலுத்த வேண்டிய நிலுவை மின் கட்டணம் தொடர்பாக மண்டபம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சார்பில் மனுதாரருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் முறைகேடு 'கண்டரியப்பட்டுள்ளது' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, 'கண்டறியப்பட்டுள்ளது' என்பதற்கு பதிலாக 'கண்டரியப்பட்டுள்ளது' என உள்ளது.
இதனால் அந்த கடிதத்தை அனுப்பிய பெண் அதிகாரியை அழைத்து விசாரித்தோம். அப்போது அந்த அதிகாரியால், கடிதத்தில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டிய போதும் அவர் அதை ஏற்காதது ஆச்சரியத்தை அளித்தது. அந்த பெண் அதிகாரியின் தமிழாசிரியர் அவருக்கு 'ர' மற்றும் 'ற' எழுத்துகளின் வித்தியாசத்தை கற்பிக்கவில்லை.
இலக்கணப்பிழை
இதேபோல் சமீபத்தில் எனது வீட்டு உதவியாளர் பொருள் வாங்கிக் கொண்டு வந்து 'பாக்கி' தொகை என எழுதுவதற்கு பதிலாக 'பக்கி' என குறிப்பிட்டு இருந்தார். சமீபத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக கோர்ட்டுக்கு வந்த மாணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கு மன்னிப்பு கடிதம் எழுதுமாறு கேட்டேன். அவன் எழுதிய கடிதத்தில் 'வேக்குவாதம்' என குறிப்பிட்டு இருந்தான்.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியக்கூடாது என்று சொல்வார்கள். அதை நான் உணர்கிறேன். ஏனென்றால் ஐகோர்ட்டு சான்றுடன் கூடிய உத்தரவுகளில் கூட எழுத்துப்பிழைகள், இலக்கண பிழைகள் உள்ளன. அலுவலக தகவல் தொடர்புகள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழை இல்லாமல் இருக்க வேண்டும். ஆங்கில கலப்பு இல்லாமல் சுத்தமான தமிழில் பேச முடியாது. அதே நேரத்தில் எழுதும் போது சுத்தமாகவும், பிழையின்றியும் எழுத வேண்டும்.
ஏற்க முடியாது
பாரதியார் கூறியது போல், தாய்மொழியான தமிழ் மொழியை வதைப்பதை ஏற்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு மீது உதவி செயற்பொறியாளர் 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.