ஈரோடு: கார் மீது கரும்பு லாரி கவிழ்ந்து 3 பேர் பலி
|தமிழகம் மற்றும் கர்நாடகாவை இணைக்க கூடிய, சத்தியமங்கலம் மற்றும் மைசூரு நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது, 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் பகுதியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கரும்புகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் சென்று கொண்டிருந்த காரின் மீது கவிழ்ந்தது. அந்த காரில் 6 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த கரும்பு கட்டுகள் சரிந்து காரின் மீது விழுந்தன. இதில், காரில் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவை இணைக்க கூடிய, சத்தியமங்கலம் மற்றும் மைசூரு நெடுஞ்சாலையில் சென்றபோது, 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே இந்த விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து எதிரொலியாக, திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநிலங்கள் இடையேயான வாகன போக்குவரத்திலும் தடை ஏற்பட்டு உள்ளது. அதனை சீர் செய்யும் பணியும் நடந்து வருகிறது.