< Back
மாநில செய்திகள்
ஈரோடு சின்ன மார்க்கெட்டில்ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதற்கு எதிர்ப்புஅமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு சின்ன மார்க்கெட்டில்ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதற்கு எதிர்ப்புஅமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
25 Aug 2023 3:05 AM IST

ஈரோடு சின்ன மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் சு.முத்துசாமி இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரோடு சின்ன மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் சு.முத்துசாமி இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனி மார்க்கெட்

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு அருகே ரூ.54 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறிய நிலையில், கடைகளை பொது ஏலத்தில் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு ஜவுளி கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக புதிய வணிக வளாக கடைகள் ஏலம் போகவில்லை. புதிய வணிக வளாகம் கட்டுமான பணிக்கு முன்னரே மாநகராட்சி அனுமதியின் பேரில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையில் 60 நாட்களில் தற்காலிக கடைகளை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகத்தை ஏலத்தில் விட வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்யக்கோரி கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் அமைச்சர் சு.முத்துசாமியிடம் முறையிட்டனர். மேலும் கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் பேச்சுவார்த்தை

இதன் காரணமாக தற்காலிகமாக செயல்பட்டு வந்த 120 கடைக்காரர்களுக்கு, ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் எனப்படும் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போது சின்ன மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அதன் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி கடைகள் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், சின்ன மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கு, அங்கு ஏற்கனவே காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமைச்சர் சு.முத்துசாமியிடம் நேரில் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து இரு தரப்பு வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் சு.முத்துசாமி அவரது முகாம் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சின்ன மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள சிக்கல்களை எடுத்து கூறினார். ஜவுளி வியாபாரிகளுக்கு கனிமார்க்கெட் அருகே உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள பழைய சந்தை பகுதியில் கடைகள் அமைக்க முடியுமா? என மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் பாதிப்பு

மேலும், அந்த பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தர அதிகாரிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார். தொடர்ந்து ஜவுளி வியாபாரிகளிடம் அதிகாரிகளின் அறிக்கை வந்த பின்னர் தான், 120 வியாபாரிகளுக்கும் கடைகள் அமைக்க முடியுமா? என பார்த்து விட்டு பிறகு முடிவெடுக்கலாம் என அமைச்சர் கூறினார். அதன்பேரில், இரு தரப்பு வியாபாரிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் நேற்று 3-வது நாளாக கடைகளை திறக்காததால் வெளியூர் வியாபாரிகள் மற்றும் குறைந்த விலையில் ஜவுளி வாங்கும் ஏழை, நடுத்தர பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்