< Back
மாநில செய்திகள்
ஈரோடு நேதாஜி ரோட்டில் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் அச்சப்படும் பெண்கள்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு நேதாஜி ரோட்டில் மதுப்பிரியர்களின் அட்டகாசத்தால் அச்சப்படும் பெண்கள்

தினத்தந்தி
|
7 Aug 2023 3:40 AM IST

ஈரோடு மாவட்டத்தில் 207 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் 24 கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது 183 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 207 டாஸ்மாக் மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் 24 கடைகள் அடைக்கப்பட்டன. தற்போது 183 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு இடையூறு

ஒருசில கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால், அதை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரில் நெருக்கமான குடியிருப்புகள், கடைகள் அதிகமான இடங்களில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஈரோடு நேதாஜிரோட்டில் மரப்பாலம் செல்லும் வழியில் உள்ள மதுக்கடையும், பிரகாசம் வீதியில் உள்ள மதுக்கடையும் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளன. இந்த கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கடைகளுக்கு அருகிலேயே கடைகள், ஆஸ்பத்திரிகள், வீடுகள் உள்ளன. அங்கு மது பிரியர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் கூறும் கருத்துக்களை காணலாம்.

சுகாதாரக்கேடு

ஈரோடு நேதாஜிரோடு பகுதியை சேர்ந்த சாபிராவ் பீவி:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அதாவது கடைக்கு அருகில் செல்லும் முட்டு சந்து போன்ற சிறிய வீதியில் எங்களது வீடுகள் உள்ளன. அங்கு 6 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றாலே, இந்த கடையை கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது.

கடையில் மது வாங்குபவர்கள் எங்கள் வீதியிலேயே அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் நடந்து செல்லும் வழியிலேயே வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது, காலி மதுபாட்டிலை உடைப்பது என அட்டகாசம் செய்கின்றனர். அவர்களால் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மதுக்கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

சட்டவிரோத விற்பனை

இல்லத்தரசி ரபீதா:- மதுக்கடை இருப்பதால் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. ஆங்காங்கே காலி மது பாட்டில்கள் உடைக்கப்பட்ட நிலையில் கிடக்கிறது. சாக்கடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்படுகிறது. இதை சுத்தம் செய்வதே கிடையாது. ரோட்டிலேயே நின்று மது குடிப்பதால் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு செல்லும் சிறுமிகள் படும் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடிவில்லை.

மது பிரியர்களின் தொல்லை காரணமாக சொந்த வீடுகளில் வசித்த 2 குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வாடகை வீட்டுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். எங்களால் வாடகை கொடுக்க முடியாத நிலை இருப்பதால், பல ஆண்டுகளாக இந்த வேதனையை அனுபவித்து இங்கே வசிக்கிறோம். அருகில் திருமண மண்டபம் உள்ளது. அங்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது காலை 7 மணியில் இருந்து மதுக்கடையில் மதுப்பிரியர்கள் கூடி விடுகின்றனர். தினமும் காலை 6 மணியில் இருந்தே சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது. மது குடிப்பவர்களும் ஆங்காங்கே நின்றுகொண்டு தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் நிம்மதி இழந்து தவிக்கிறோம். டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றினால் மட்டுமே எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

மாணவர்கள்

இல்லத்தரசி நெடுர்நிஷா:-

மதுக்கடையில் காலையில் இருந்தே கூட்டம் கூடிவிடுகிறது. மாலையில் ஏராளமானவர்கள் ஆங்காங்கே நின்றுக்கொண்டு மது குடிப்பதால் வீடுகளிலேயே நாங்கள் தஞ்சம் அடைந்து விடுகிறோம். இரவு 8 மணிக்கு மேல் வெளியிலேயே வருவதில்லை. அருகில் உள்ள மருந்துக்கடைக்கு கூட செல்ல வேண்டுமென்றால் காலையில் பார்த்து கொள்ளலாம் என்று வெளியில் வருவதை தவிர்த்து விடுகிறோம். இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இந்த பிரச்சினை காரணமாக எங்களது வீட்டுக்கு உறவினர்கள் கூட வருவது கிடையாது. உறவினர் இறந்து விட்டால் 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பது உண்டு. அப்போதும் உறவினர்கள் வீட்டுக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். மதுப்பிரியர்களின் அட்டகாசத்தினால் வீட்டுக்கு யாரும் வருவது கூட கிடையாது. பள்ளிக்கூட மாணவர்களும் சீருடையுடன் வந்து மதுவாங்கி குடிப்பதையும் நேரில் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் அறிவுரை கூறினால் ஏற்க மறுக்கின்றனர். சீருடைகள் அணிந்து வரும் மாணவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதை ஏற்க முடியவில்லை. மது போதையில் பலரும் ஆங்காங்கே ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். அரைகுறை ஆடையுடன் கிடப்பதால் அந்த வழியாக பெண்கள் நடந்து செல்வதற்கு முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் அச்சத்துடனே பெண்கள் சென்று வருகின்றனர்.

எம்.எல்.ஏ. நடவடிக்கை

நேதாஜி வீதியில் உள்ள பர்னிச்சர் கடை உரிமையாளர் எம்.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-

இந்த டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். டாஸ்மாக் மேலாளரிடம் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ஒரு விளக்க கடிதம் வந்தது. அதில் விரைவில் இந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிக வருமானம் இருப்பதால் இந்த கடை அகற்றப்படாமல் உள்ளதாக பலரும் கூறுகின்றனர். வருமானத்தை காட்டிலும் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும்.

கடைக்காரர்களே கடையின் முன்பு கம்பிவலை அமைத்து சிறைக்குள் இருப்பதுபோல் வியாபாரம் செய்து வருகின்றனர். மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பலமுறை இந்த பகுதியில் ஆய்வு செய்து, மதுக்கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். எனவே தற்போதைய எம்.எல்.ஏ.வாக உள்ள அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் பிரகாசம் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையும் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்குள்ள வியாபாரிகள் சார்பில் பெரும் முயற்சி எடுக்கப்படுகிறது.

நிம்மதி

நேதாஜி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் வி.கே.முத்துசாமி:-

மது குடிக்க வருபவர்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே வழியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் அவசர சிகிச்சை வரும் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால் மது பிரியர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆஸ்பத்திரி, கடைகளின் முன்பு குடித்துவிட்டு படுத்து கிடக்கின்றனர். எனவே வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுக்கடையை அகற்றினால் மட்டுமே மக்கள் நிம்மதி அடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்