ஈரோடு
ஈரோடு கொங்கம்பாளையத்தில் நள்ளிரவில் திறந்து விடப்பட்ட சாயக்கழிவுநீர்
|ஈரோடு கொங்கம்பாளையத்தில் நள்ளிரவில் சாயக்கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு கொங்கம்பாளையத்தில் நள்ளிரவில் சாயக்கழிவுநீர் திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சாயக்கழிவுநீர்
ஈரோடு கொங்கம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாய, சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து இரவு நேரங்களில் சாயக்கழிவுநீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் திடீரென திறந்து விடப்பட்டது. அங்கு திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நுங்கும், நுரையுமாக சாயக்கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு கடுமையான நெடியுடன் சாயக்கழிவு ஓடியதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். சுமார் 100 பேர் அங்கு திரண்டனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எங்களது பகுதியில் சுமார் 30 சாய, சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து இரவு நேரத்தில் சட்ட விரோதமாக சாயக்கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. அது ஒரு ஓடையின் வழியாக சென்று காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ஓரிரு பட்டறைகள் மீது மட்டுமே பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை.
நள்ளிரவில் திறக்கப்பட்ட சாயக்கழிவுநீர் தண்ணீரைபோல பெருக்கெடுத்து ஓடியது. அதில் இருந்து நெடி வெளியானதால் மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதி அடைந்தோம். எனவே மனிதாபிமானம் இல்லாமல் சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவுநீரை திறந்து விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் சாய, சலவை பட்டறைகளை மூடுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு கொங்கம்பாளையத்தில் நள்ளிரவில் சாயக்கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.