ஈரோடு
ஈரோடு அரசு மாணவர்கள் விடுதியில் ஒரே நாளில் 6 செல்போன்கள் திருட்டு
|ஈரோடு அரசு மாணவர்கள் விடுதியில் ஒரே நாளில் 6 செல்போன்கள் திருட்டு போனது.
ஈரோடு ஈ.வி.என்.ரோடு ஸ்டோனி பாலம் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு கல்லூரி, ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்கள் சுமார் 100 பேர் தங்கி உள்ளனர்.
இந்தநிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களது செல்போன்களை மர்மநபர் திருடிவிட்டதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
நாங்கள் அரசு விடுதியில் உள்ள அறைகளில் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) வழக்கம்போல் தூங்கினோம். அப்போது எங்களுடைய படுக்கைகளுக்கு அருகிலேயே செல்போன்களையும் வைத்திருந்தோம். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது 6 செல்போன்களையும் காணவில்லை. நள்ளிரவில் விடுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் செல்போன்களை திருடி சென்றிருக்க வேண்டும். எனவே திருடப்பட்ட செல்போன்களை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இந்த மனு தொடர்பாக ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.