ஈரோட்டில் காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து - போக்சோவில் கைதானவர் ஜாமீனில் வெளிவந்து துணிகரம்
|ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் 21 வயது இளைஞர் நவீன்குமார். பெயிண்டராக வேலை செய்து வரும் இவர், ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகளில் கைதாகியுள்ளார்.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியை நவீன்குமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாணவியின் பின்னால் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில், நவீன்குமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் மாணவியின் கழுத்தில் 6 இடங்களில் கத்தி பாய்ந்தது. வலியால் அலறித்துடித்த மாணவியின் குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, நவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நம்பியூரில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர். இதற்கு முன்பு மாணவிக்கு தொல்லை கொடுத்தது தொடர்பாக, நவீன்குமாரை ஏற்கனவே பவானிசாகர் போலீசார் பலமுறை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதே சமயம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தந்தையை இழந்த மாணவியை அவரது தாயார் சமையல் வேலைக்குச் சென்று படிக்க வைத்து வந்துள்ளார். தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டுமானால், குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.