ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படை
|ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை இந்திய தேர்தல் கமிஷன் அனுப்பும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படை அனுப்பப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் கமிஷன் அனுப்புகிறது.
இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து, அதைத் தடுக்க 6 பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை அங்கு ரூ.25.43 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாகன சோதனை தொடர்ந்து தினமும் நடத்தப்படுகிறது. 24 மணி நேரமும் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 6 பறக்கும்படை குழுக்கள் 3 'ஷிப்ட்'களில் பணியாற்றி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா குறித்த புகார் வந்ததும் சம்பவ இடத்துக்கு செல்ல பறக்கும் படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடர்ந்து எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களையும் தேர்தல் கமிஷன் நியமிக்கும்.
அ.தி.மு.க. சார்பில் 5 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் அது சரியாகத்தான் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.