ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரசாரத்தை தொடங்கியது திமுக
|திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர்
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் காங்கிரசுக்கு வெற்றிக்கனியைப் பறித்து தரும் வகையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் திமுக தொண்டர்கள்.
அதன் ஒரு முக்கிய அங்கமாக, வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் துவங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு சேகரிக்கும் இந்த பணியானது ஈரோடு பெரியார் நகரில் இருந்து துவங்கி, தொடர்ந்து தொகுதி முழுவதும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.