< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்:கூட்டணி தர்மத்துடன் பா.ஜ.க. தேர்தல் பணியாற்றியதுவிழுப்புரத்தில் அண்ணாமலை பேட்டி
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்:கூட்டணி தர்மத்துடன் பா.ஜ.க. தேர்தல் பணியாற்றியதுவிழுப்புரத்தில் அண்ணாமலை பேட்டி

தினத்தந்தி
|
3 March 2023 12:15 AM IST

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணி தர்மத்துடன் தேர்தல் பணிசெய்தது என்றும் விழுப்புரத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.


விழுப்புரம் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் சக்திகேந்திரா நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வலிமை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பா.ஜ.க., மிகவும் வலிமை பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மாறிமாறி ஆட்சியிலிருந்த திரிபுராவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அதேபோல் நாகாலாந்து மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு 3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. மேகாலயா தேர்தலிலும் பா.ஜ.க. தனித்துநின்று வெற்றி பெற்றிருக்கிறது.

மோடியின் சாதனை திட்டங்களால்தான் தற்போது நடந்த 3 மாநில பேரவைத்தேர்தலிலும் பா.ஜ.க. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருக்கிறது.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாழ்த்துகள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்துடன் பா.ஜ.க. தேர்தல் பணியாற்றியது. இத்தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. வென்றால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை.

ஆளுங்கட்சிக்கு இணக்கமாக இருக்கும் எம்.எல்.ஏ. கிடைத்தால் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டுப்பெறலாம் எனக்கருதி மக்கள் வாக்களித்திருக்கலாம். அதற்காக தி.மு.க. ஆட்சியின் செயல்பாட்டை ஏற்று மக்கள் வாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

குறுகிய வட்டத்துக்குள் திருமாவளவன்

திருமாவளவன், புது அரசியலை ஸ்டாலினுக்கு கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறார். பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என திருமாவளவன் கூறியிருப்பது, தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற திருமாவளவன் காரணத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். திருமாவளவன் குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதிக்கட்சிதான். பா.ஜ.க.வை பொறுத்தவரை மோடியை யார், எந்த கட்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறதோ அந்த கட்சிகளுடன்தான் கூட்டணி சேருவோம்.

சமையல் எரிவாயு விலை

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

தேவை அதிகம், உள்ளூரில் உற்பத்தி இல்லாதது போன்றவையும் காரணமாகும். ரஷியாவில் இருந்து நாம் பெட்ரோல், டீசல் பீப்பாய்களை அதிகம் கொள்முதல் செய்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி. இணைவது அவர்கள் சார்ந்த முடிவு. அந்த கட்சி எடுக்கும் முடிவு. அதில் பா.ஜ.க. தலையிடாது.

முதல்-அமைச்சரின் பகல் கனவு

பா.ஜ.க.வை வீழ்த்துவதுதான் ஒற்றை இலக்கு என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் எப்போது தேசிய அரசியலுக்கு வந்தார். இங்கு இருக்கிற கும்மிடிப்பூண்டியை கூட தாண்டாதவர்கள் தேசிய அரசியலுக்கு எப்படி வர முடியும். சென்னையில் நடைபெற்ற முதல்-அமைச்சர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் சந்திரசேகரராவ், மம்தாபானர்ஜி, அரவிந்த்கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் வந்திருந்தால் விழா முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஏன் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கூட வரவில்லை. ஸ்டாலினின் தேசிய அரசியல் என்பது பகல் கனவுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்பின்னர் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள முருகன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்