ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிகளுக்கான குழுவில் மேலும் 5 பேர் சேர்ப்பு
|தேர்தல் பணிகளுக்காக 106 பேர் கொண்ட பட்டியலை அதிமுக இன்று அறிவித்த நிலையில், மேலும் 5 பேர் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இதில் அவைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 106 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிகளுக்கான 106 பேர் கொண்ட குழுவில் மேலும் 5 பேர் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில், "ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள். கீழ்க்கண்டவர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
திரு. மாபா. பாண்டியராஜன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
திரு. சுதா கே. பரமசிவன், கழக அமைப்புச் செயலாளர்
திரு. P.G. ராஜேந்திரன், Ex. M.L.A., கழக அமைப்புச் செயலாளர்
திரு. A.K. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர்
திரு. S. சரவணபெருமாள், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதில் தெரிவித்துள்ளார்.