< Back
மாநில செய்திகள்
அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியீடு
மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் - அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியீடு

தினத்தந்தி
|
4 Feb 2023 12:46 PM IST

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும் 3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளிக்க படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு உறுபினர்கள் சுற்றறிக்கை மூலம் தேர்வு செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கையை முறையாக பூர்த்து செய்து நாளை இரவு 7 மணிக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் என்னிடம் சேர்ந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்