ஈரோடு சென்னசமுத்திரம் தி.மு.க. பெண் கவுன்சிலர் காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு
|தி.மு.க. பெண் கவுன்சிலர் ரூபாவின் உடல் காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னசமுத்திரம் பேரூராட்சியின் தி.மு.க. கவுன்சிலர் ரூபா. இவர் கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஒருவரது வீட்டில் கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் காலையில் வேலைக்கு புறப்பட்ட ரூபா, இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனது தாயாரை காணவில்லை என ரூபாவின் மகன் கோகுல், கொடுமுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவிலுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ரூபாவின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ரூபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.