ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு அண்ணாமலை கடிதம்
|இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது ,
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திடீர் மறைவால், அந்த தொகுதிக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. ஆட்சி அமைத்து 22 மாதங்கள் ஆகியும் எந்த மக்கள் நலப்பணிகளையும் மேற்கொள்ளாத திமுக அரசு, பணம் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என நம்புகிறது.
கடந்த ஜனவரி 29 ம் தேதி திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பண விநியோகம் குறித்து பேசிய ஆடியோ வெளியானது. இது தொடர்பாக விரிவான தகவல்களுடன், திமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
கடந்த 11ம் தேதி திமுக தெற்கு யூனியன் காசாளர் சர்புதின் என்பவரது காரில் இருந்து திருப்பூரில் போலீஸ் அதிகரிகள் மற்றும் அதிகாரிகள் டோக்கன்களை பறிமுதல் செய்தனர்.<கடந்த வாரம், வாக்காளர்களுக்கு தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக விநியோகம் செய்துள்ளனர்.
தொகுதியில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், தொகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தினமும், அமரும் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், தொடர்ச்சியாக 20 நாட்கள் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தால் ரூ.5 ஆயிரமும் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாஜகவினர் அளித்த புகார்களில் மாநில தேர்தல் ஆணையம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக., அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஈரோட்டில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .