< Back
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை - 5 அடுக்கு பாதுகாப்பு
மாநில செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை ஓட்டு எண்ணிக்கை - 5 அடுக்கு பாதுகாப்பு

தினத்தந்தி
|
1 March 2023 6:25 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவுக்கான நேரம் மாலை 6 மணிக்கு முடிந்தாலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காத்து இருந்ததால், டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் முறையாக சீல் வைக்கப்பட்டன. பின்னர் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை பெற்றுக்கொண்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனர்.

அனைத்து ஓட்டுப்பெட்டிகளும் சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.)-க்கு கொண்டு வரப்பட்டன. அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஓட்டுப்பெட்டி காப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உரிய இடங்களில் அந்தந்த எண் கொண்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, தலா ஒரு வி.வி.பேட் கருவி, தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தொடர்ந்து காப்பு அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்த பின்னர், காப்பு அறை சீல் வைத்து பூட்டப்பட்டது. தொடர்ந்து சித்தோடு அரசு என்ஜினீரியங் கல்லூரி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. துணை ராணுவப்படை வீரர்கள் தவிர தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று 450 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 2 அடுக்கு, துப்பாக்கி ஏந்தி ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப்படை போலீசார், மாவட்ட போலீசார் 3 அடுக்கு என மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்